இந்திய விமானப்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏர் சீஃப் மார்ஷல் என்ற உயரிய அந்தஸ்துடன் அக்டோபர் 31-ம் தேதி பதவியேற்க உள்ளார். இவரது பதவிக்காலம் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎம், விஎஸ்எம் ஆகிய விருதுகளைப் பெற்றவர். இவர் அக்டோபர் 31-ம் தேதி பிற்பகல் முதல் இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் மற்றும் பிற விமானத் திட்டங்களை இந்திய விமானப்படையில் இணைப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் அசுதோஷ் தீட்சித் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் அரசின் 'ஆத்மநிர்பர்தா' (தன்னிறைவு) திட்டத்திற்கு இவர் தொடர்ந்து ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் இவர் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமி, வங்கதேசத்தில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான இவர், 3,500 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.

