தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி, அவரது தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் எஸ்.
தினேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு, நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. மனுதாரரின் வழக்கறிஞர் வி.
ஆர். சண்முகநாதன் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களின்படி, கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என்றும், ஆனால் அதனைத் தனது சொத்தாக முதல்வர் விஜய் காட்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள சொத்துக்களின் மதிப்பு, பரப்பளவு மற்றும் கையகப்படுத்திய விதம் குறித்தும் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, பாடியில் உள்ள வணிக வளாகத்தை 35 கோடி ரூபாய்க்கு விற்றதை மறைத்து, அதன் மதிப்பு மற்றும் கையகப்படுத்திய விதம் குறித்து தவறான தகவல்களைப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பதாக மனுதாரர் வாதிட்டார். நீலாங்கரை பங்களா குறித்து, அது பரம்பரைச் சொத்து என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், உண்மையில் அது அவரது தந்தை எஸ்.
ஏ. சந்திரசேகரால் வாங்கப்பட்டு, பின்னர் மகனுக்கு வழங்கப்பட்டது என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், கற்பனையானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பில் சிறிய மாற்றங்கள் இருப்பது தேர்தல் முடிவை எந்த வகையிலும் பாதிக்காது என்று அவர் வாதிட்டார். மேலும், பெரம்பூர் தொகுதியில் 1,20,365 வாக்குகள் பெற்று, 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தன்னை, இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கூறுகையில், "மக்கள் என்னை ஒரு நடிகராகவும், நல்ல மனிதராகவும், நேர்மையான அரசியல் மாற்றத்தை வழங்குபவராகவும் கருதி வாக்களித்தனர். சொத்து மதிப்பில் உள்ள சிறிய மாற்றங்கள் வாக்காளர்களின் முடிவை மாற்றியிருக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், தொழில்நுட்ப ரீதியான சிறிய குளறுபடிகளை வைத்துத் தேர்தல் முடிவைச் செல்லாது என அறிவிக்கக் கோருவது ஏற்புடையதல்ல என்று முதல்வர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரியுள்ளார். இந்த வழக்கில் முதல்வர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கடந்த இரண்டு நாட்களாக வாதங்களை முன்வைத்தார். மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்பதற்காக, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


