கள்ளழகர் கோயில் பெயர்ப்பலகை விவகாரம்:
மதுரை: மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ், சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தில் பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகள் டிஜிட்டல் முறையில் மறைக்கப்பட்டு, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டுகளில் பெயர்ப்பலகை எவ்வாறு இருந்ததோ அதே முறையில்தான் தற்போதும் இருப்பதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், பொறுப்பான செய்தி ஊடகத்தை பயன்படுத்தி உண்மையை மாற்றிச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதுபோன்ற செய்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை குறித்து தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என அமைச்சர் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்புவதற்கு முன்பு அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்ச்சைக்குரியதாக கூறப்படும் புகைப்படத்துடன், தற்போது எடுக்கப்பட்ட கள்ளழகர் கோயில் பெயர்ப்பலகையின் புகைப்படத்தையும் அமைச்சர் தனது பதிவில் இணைத்துள்ளார்.
“சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும்” எனவும் அமைச்சர் ரமேஷ் தனது பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.


