கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் இந்தி மொழியில் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்தே பெறப்படுவதாகவும், கோவை சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்தியில் அச்சிட அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்களை அச்சிட கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி தி.மு.க ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தி.மு.க ஆட்சியில் இந்தி கவர்கள் புழக்கத்திற்கு விடப்பட்ட நிலையில், தற்போது த.வெ.க அரசு மீது பழிபோடுவது ஏன் என அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் கவனத்திற்கு வந்தவுடன் கரூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் அந்த மாத்திரை கவர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டுமே விவரங்கள் அச்சிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
