மேட்டூர் அருகே உள்ள கண்ணாமூச்சி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இந்த சிறுத்தை இதுவரை 20 ஆடுகள், 2 மாட்டுக் கன்றுகள், 3 நாய்கள் மற்றும் 15 கோழிகளைக் கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தனர்.
சிறுத்தையைப் பிடிக்க மேட்டூர் வனச்சரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையிலான குழுவினர் மிளகாய்பொதை உள்ளிட்ட ஐந்து இடங்களில் கூண்டுகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட வனத்துறையினர் இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சியின் பலனாக, மிளகாய்பொதை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை நேற்று இரவு சிக்கியது.
சிறுத்தை பிடிபட்டதை உறுதி செய்த மாவட்ட வன அலுவலர் அம்புல்கர் யஷ்வந் ஜெகதீஸ், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கால்நடை மருத்துவர் மூலம் சிறுத்தைக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதனை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

