மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததே இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, பாமகவை கூட்டணியில் இணைத்து, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தவெக தலைமையில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணியில் இணையாமல், வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தன. இருப்பினும், தவெக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக அரசு மீது கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
விசிகவும் அவ்வப்போது அரசை விமர்சித்து வருவதால், இந்த இரு தரப்பு தலைவர்கள் மீதும் முதல்வர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 4 எம்எல்ஏக்களைக் கொண்ட பாமகவை கூட்டணியில் இணைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், 'திமுக கூட்டணியில் இருந்தபோது கூட்டணி தலைமை குறித்து எந்த விமர்சனமும் செய்யாத கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது தவெக அரசை மட்டும் எதற்கெடுத்தாலும் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?
அவர்களின் நிலைப்பாடு என்னவென்று புரியவில்லை. எனவேதான், 4 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாமகவை கூட்டணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே பாமகவும் விசிகவும் இணைந்து செயல்பட்டுள்ளதால், கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இருக்காது' என்று தெரிவித்தனர்.

