மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதற்காக அந்தந்த தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டு, வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் 21 சுற்றுகளாகவும், தாராபுரத்தில் 23 சுற்றுகளாகவும், தட்டாஞ்சாவடியில் 4 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
மதுராந்தகம் தொகுதி வாக்குகள் ஆத்தூர் சமூக மேம்பாட்டுப் பயிற்சி மையத்திலும், தாராபுரம் தொகுதி வாக்குகள் திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கடந்த 6-ம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 85.99 சதவீதமும், தாராபுரத்தில் 80.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவிய இந்தத் தொகுதிகளில், தவெக, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு இன்று மாலைக்குள் தெரியவரும்.
