எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி என்.லோகேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 25 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் 24 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆஜராகவில்லை என்பதால், அவர் விலக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை மூன்று மாதங்களில் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். சாட்சி விசாரணை எப்போது தொடங்கும் மற்றும் ஆவணங்கள் எப்போது தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.



