தமிழகத்தில் பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமோகன், ஜெயந்தி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அண்ணா நூலக தலைமை நூலகர் காமாட்சி தரப்பில், தான் பரிந்துரைகளை அனுப்பும் பணியை மட்டுமே செய்ததாக வாதிடப்பட்டது. அரசு தரப்பில், புத்தகக் கொள்முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகளைத் தவிர்க்க புதிய கொள்கை இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. போலி புத்தகங்கள் விவகாரத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதன் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இந்த வழக்கை மட்டும் விசாரிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், முறைகேட்டில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நிவாரணங்களைப் பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.





