ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் விலகல்; ராஜினாமா விதிமுறைகள் கடுமை
ககன்யான் உள்ளிட்ட முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றி வந்த விஞ்ஞானிகளின் ராஜினாமா அதிகரித்ததைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு (VRS) கோரிக்கைகளுக்கான அனுமதி நடைமுறைகளை விண்வெளித் துறை கடுமையாக்கியுள்ளது.
ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்துறை சுற்றறிக்கையில், ககன்யான் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் 'குரூப்-ஏ' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு கோரிக்கைகளை வழக்கம்போல் ஏற்கக் கூடாது என அனைத்து இஸ்ரோ மையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC)-இல் இருந்து சுமார் 80 விஞ்ஞானிகள், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC)-இல் இருந்து சுமார் 20 விஞ்ஞானிகள் பணியை விட்டு விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது பரிசீலனையில் உள்ள கூடுதல் ராஜினாமாக்களையும் சேர்த்தால், பணியை விட்டு விலகிய விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
0Likes
1Dislikes

