தமிழகத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் பல கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் கண்டறியப்பட்டதை அடுத்து, 2023 நவம்பரில் மணல் குவாரிகள் மூடப்பட்டன. தற்போது அரசுக்கு வருவாய் இழப்பை ஈடுகட்டவும், கட்டுமான மணல் தட்டுப்பாட்டை போக்கவும் கடலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 இடங்களில் மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரிகள் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மணல் கொள்ளையை ஊக்குவிக்கும் இரட்டைத் தீமைகளை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களுக்கும் அதை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் பெரும் பாதிப்பை விளைவிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டில் 25 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, அதிகபட்சமாக 7.51 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் வெட்டி எடுக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், 27.70 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது. இப்போதும் அதே நிலை தொடரும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு போன்ற ஆறுகள் வறண்டு, காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிகப்படியான மணல் அள்ளப்படுவதைத் தடுக்க, குஜராத்தில் செயல்படும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஜியோ இன்பார்மாடிக்ஸ் (BISAG) செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த கண்காணிப்பு முறை சாத்தியமல்ல என விவசாயிகள் கருதுகின்றனர். கட்டுமான மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட மாற்று வழிகளை அரசு பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேகதாது அணை மூலம் காவிரி நீரைத் தடுத்து காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்க கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், தமிழக அரசு டெல்டா பகுதியில் மணல் குவாரிகளை திறப்பது இந்த மாவட்டங்களை மேலும் பாலைவனமாக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். எனவே, டெல்டா பகுதியில் மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
0Likes
2Dislikes


