ஈரோடு, ஜூலை 16: நடப்பு காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார்.
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எல்நினோ நிகழ்வு காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளதால், மானாவாரி பயிர்கள் பாதிக்கப்படக்கூடும் என கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே, நடப்பு பயிர்களுக்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளும், வாழை, மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்ளும் விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும்.
மகசூல் இழப்பு, விதைப்பு அல்லது நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளுக்கு இத்திட்டம் காப்பீடு வழங்குகிறது.கடன் பெறும் விவசாயிகள் தங்களது தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்யலாம்.
கடன் பெறாத விவசாயிகள் இ-சேவை மையங்கள், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாகவும், அல்லது தேசிய பயிர் காப்பீடு இணையதளமான https://pmsby.gov.in இல் உள்ள 'விவசாயிகள் கார்னர்' மூலம் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.
பதிவு விண்ணப்பத்துடன், முன்மொழிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ. வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை எண், கட்டண ரசீது, கிராமம் மற்றும் குறுவட்ட விவரங்களை பதிவேற்ற வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை அலுவலரை அணுகலாம்.
1Likes
0Dislikes


