பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'பொதுத்தேர்வுகள் (முறையற்ற செயல்களைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026' மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி, தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். முறைகேடுகளில் தொடர்புடைய சேவை நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் அபராதமும், 8 ஆண்டுகள் தடையும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் விசாரணை மற்றும் தீர்ப்பை விரைந்து முடிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. அரசுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இந்த திருத்தங்களின் நோக்கம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். 2024-ல் இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறையை ஏவியதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கோர வலியுறுத்தியதால் அவையில் அமளி ஏற்பட்டது. கடும் விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




