அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. சிவசாகர் மாவட்டத்தில் புதிதாக 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது 7 மாவட்டங்களில் உள்ள 622 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 3.32 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தங்க வைக்க 81 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிலிருந்து குவாஹாத்திக்கு நிவாரணப் பொருட்களை இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதி அளித்துள்ளது.
மேலும், அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி வெள்ள நிலவரத்தைக் கேட்டறிந்து, மாநிலத்திற்குத் தேவையான அனைத்து மத்திய உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இழப்பீடு பெறுவதற்கு பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 4 லட்சத்துடன், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



