தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்), மது விற்பனையை நவீனப்படுத்தும் நோக்கில் 'Tasmace2e.in' என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறது.
வரும் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்தத் தளத்தின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட கடைகளின் இருப்பு நிலையை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்க்க முடியும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, தங்களுக்கு விருப்பமான கடைகளில் மதுபானங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
மது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 21 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும். லாக்-இன் செய்த பிறகு, 5 கி.மீ முதல் 25 கி.மீ சுற்றளவில் உள்ள கடைகளைத் தேடலாம் அல்லது மாவட்டம் மற்றும் கடை எண் வாரியாக வடிகட்டலாம். ஒரு நகரத்தில் இருந்துகொண்டு மற்றொரு பகுதியில் உள்ள கடைகளில் மதுபானங்களை முன்பதிவு செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க முடியும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

