சென்னையில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 75 வேலை நாட்களுக்குள் 2 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு நாளொன்றுக்கு 100 நாய்கள் வீதம் தினமும் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமின் மூலம் பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு நாய் மற்றும் பூனைகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கப்பட்ட முந்தைய முகாமில், 1,47,545 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



