தருமபுரி மாவட்டம் எரியூர் அருகே உள்ள மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ரசாயனக் கழிவுகள் கலந்து தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளதாகவும், கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வைரல் காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீர்த்தேக்க நீர் குடிநீராகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதால், நிலவும் சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கவலை தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரி நீரை முறையாகத் திறந்துவிடாத சூழலில், இருக்கும் நீரை முறையாகப் பாதுகாப்பது அரசின் கடமை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் அசுத்தமடைவதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2F2-2026-08-10-15-50-57.jpg&w=3840&q=75)
