சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதையொட்டி, நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் வரையிலான வழித்தடம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் ஆகியவை சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இப்பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழாவின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு தகைசால் தமிழர் விருது, ரூ.10 லட்சம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். மேலும், அறிவியல் தொழில்நுட்பம், துணிவு மற்றும் சாகசச் செயல், நல் ஆளுமை, மாற்றுத்திறனாளிகள் நலன், மகளிர் மேம்பாடு மற்றும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல்வேறு மாநில விருதுகளையும் அவர் வழங்கி கௌரவிக்கிறார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் 7-வது முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்கிறார். முன்னதாக, மெரினா கடற்கரையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




