தில்லி செங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த தேசிய விழாவில், காங்கிரஸ் கட்சியின் இந்த இரு மூத்த தலைவர்களும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பின்பற்றப்படும் நெறிமுறைகள் மற்றும் இருக்கை ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தி காரணமாகவே அவர்கள் விழாவைப் புறக்கணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவிலான அரசு விழாக்களில் தங்கள் கட்சியின் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும், அவர்களின் பதவிக்கு ஏற்ற வகையில் இருக்கைகள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அரசு விழாக்களில் இருக்கை ஒதுக்கீடு என்பது அதிகாரப்பூர்வ முன்னுரிமைப் பட்டியலின் (Table of Precedence) படியே தீர்மானிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு மத்திய அமைச்சருக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுவதாகவும், அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளின்படியே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





