டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லிக்கு வர வேண்டிய 15 விமானங்கள் மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டன. தலைநகரில் தொடர்ந்து மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதுடன், ஆரஞ்சு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
குருகிராம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் வரை 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், வடிகால் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, ஆகஸ்ட் 25-ம் தேதி அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிய (Work from home) குருகிராம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியிலும் முக்கிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



