இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்தன. நிலச்சரிவுகள், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 2,000 மக்கள் பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன இருவரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு சுமத்ரா பகுதியில் சனிக்கிழமை 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானது. இது 175 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தட்டுப் பெயர்ச்சி காரணமாக ஏற்பட்டதாகவும், இதனால் சுனாமி ஆபத்து இல்லை என்றும் இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்' பகுதியில் அமைந்துள்ளதால், இந்தோனேசியா தொடர்ந்து நிலநடுக்க அபாயத்திற்கு உள்ளாகும் பகுதியாக உள்ளது.





