மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், ராம்பூர்ஹட் தொகுதியின் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினருமான ஆசிஷ் பானர்ஜி, பீர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாக உறுதிப்படுத்திய காவல்துறையினர், உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சடலத்திற்கு அருகில் கைப்பற்றப்பட்ட கையெழுத்து கடிதத்தில், தனது அரசியல் வாழ்க்கை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஆசிஷ் பானர்ஜி, ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தாராபித் ராம்பூர்ஹட் மேம்பாட்டு ஆணையத்தில் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்பப்பட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மறைந்த தலைவருக்கு எதிராக நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை கண்டித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, பொதுவெளியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் தாக்கம் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




