அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடை செய்ய வேண்டும் என கல்லூரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வித் துறை ஆணையர் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மாணவர்கள் என்பதற்காக அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முடியாது என்றும், மாணவர்களின் அரசியல் பங்கேற்பைக் கண்காணித்து ஒடுக்கும் முயற்சியை ஏற்க முடியாது என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

