இந்தியாவில் ஒரு நபர் வைத்திருக்கும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான நடைமுறைகள் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதிய சிம் கார்டுகளை வழங்கும் முன்பாக, விண்ணப்பதாரர் ஏற்கனவே வைத்துள்ள இணைப்புகளைச் சரிபார்க்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைப்படி, விண்ணப்பப் படிவத்தில் தங்களின் பெயரில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சேவைப் பகுதிகளில் உள்ள அனைத்து மொபைல் எண்களையும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனைச் சரிபார்க்க, அரசின் 'டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்ஃபார்ம்' (Digital Intelligence Platform) பயன்படுத்தப்படும். இதில் ஆகஸ்ட் 23 முதல் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறிய பயனர்களை எளிதில் கண்டறிய முடியும்.
இந்த புதிய நடைமுறைகளைத் தங்கள் உள் கட்டமைப்போடு ஒருங்கிணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மொபைல் இணைப்புகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளைப் பயனர்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.



