டெல்லி-என்சிஆர் பகுதியில் எச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 1,349 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 229 பேருக்கு மட்டுமே பாதிப்பு பதிவாகியிருந்தது. ஈரப்பதமான பருவமழை சூழல் நிலவும் இந்த காலகட்டத்தில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நோயாளிகளிடம் மூச்சுத் திணறல் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைதல் போன்ற தீவிர அறிகுறிகள் தென்படுவதால் சுகாதாரத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். திடீர் காய்ச்சல், வறட்டு இருமல், உடல் வலி மற்றும் சோர்வு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. நெஞ்சு வலி அல்லது தொடர்ச்சியான மூச்சுத் திணறல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு ஒசெல்டாமிவிர் (Oseltamivir) மருந்துகளை ஆரம்பத்திலேயே வழங்கவும், கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் இருமும்போது முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



