ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதிகளில் இரண்டு வணிகக் கப்பல்கள் கடத்தப்பட்டதில், அதில் பணியாற்றிய 22 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாத மத்தியில் நடந்த இந்த இருவேறு சம்பவங்களை கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
ஏமன் நாட்டின் ஏடன் வளைகுடா பகுதியில், கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில், எரித்திரியா நாட்டு கொடியுடன் சென்ற 'எம்.டி. சிபு 1' (M T Sibu 1) என்ற எண்ணெய் கப்பலை ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி சிறைபிடித்தனர். இந்தக் கப்பலில் 16 இந்தியர்கள் உட்பட மொத்தம் 20 பணியாளர்கள் இருந்தனர். முன்னதாக, ஆகஸ்ட் 17-ம் தேதி சோமாலியாவின் புண்ட்லேண்ட் கடற்கரை அருகே கேமரூன் நாட்டு கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றையும் கொள்ளையர்கள் கடத்தினர். இதில் 10 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். இருப்பினும், கடத்தப்பட்ட இரண்டு கப்பல்களிலும் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



