இந்தியாவில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை மாற்றி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி 'ரிசர்வேஷன் ஹட்டாவ் அந்தோலன்' அமைப்பினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அபிஷேக் அக்னிஹோத்ரி மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சாதி பாகுபாடின்றி பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தற்போதைய கொள்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுத்து, மாற்று இடத்தைப் பரிந்துரைத்த போதிலும், போராட்டக்காரர்கள் அங்கேயே மேடை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது. இட ஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' பிரிவினரை நீக்குவது உள்ளிட்ட அமைதியான சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும் எனப் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தினர்.


