மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகர் அருகே உள்ள திஸ்கான் பகுதியில், ஐபோன் தவணைத் தொகை செலுத்துவது தொடர்பான தகராறால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குனால் என்ற 18 வயது இளைஞன், ஐபோன் வாங்குவதற்காகப் பணம் கேட்டு தனது பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர், அப்பகுதியில் உள்ள மலை உச்சிக்குச் சென்றுள்ளார்.
சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்தச் சம்பவத்தின்போது, உள்ளூர் மக்களும் பெற்றோரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். புதிய போன் வாங்கித் தருவதாகக் கூறியும், எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளுமாறு கெஞ்சியும் அவர் பிடிவாதமாக இருந்துள்ளார். பிற்பகல் 1 மணிக்கு, குனாலின் தந்தை முரளிதர் சந்த்குடே அவரைப் பிடித்துக் காப்பாற்ற முயன்றபோது, இருவரும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதா, தானும் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



