அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா மற்றும் எஃப்-1 (F-1) விருப்பத்தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டங்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ளது. இதன்படி, எச்-1பி மனுக்களுக்கான கட்டணம் 1,03,265 டாலராகவும், ஓபிடி விண்ணப்பங்களுக்கான கட்டணம் 1,00,000 டாலராகவும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த முன்மொழிவுகள் தற்போது வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளன.
இந்தக் கட்டண உயர்வு இந்தியர்களைப் பெருமளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட 3,99,402 எச்-1பி மனுக்களில் 71 சதவீதம் இந்தியர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிமுறைகள் வெளிநாட்டு ஊழியர்கள், பணிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என குடியேற்றச் சேவை நிறுவனமான ஃப்ராகோமென் எச்சரித்துள்ளது.
மேலும், வேலையிழக்கும் எச்-1பி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தால், வேலை இழந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.





