ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்தியாவில் செயல்படும் நான்கு நிறுவனங்கள் மற்றும் மூன்று நபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானிய அரசாங்கத்தின் வருவாய் ஆதாரங்களைக் குறைக்கும் நோக்கில், 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' (Operation Economic Outcast) என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி (Portease Partners LLP), சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட் (Sadashiva Overseas Ltd), பிபி சாஃப்டெக் பிரைவேட் லிமிடெட் (PP Softtech Pvt Ltd) மற்றும் பிரகிருதிஸ் இன்ஃப்ரா இம்பெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Prakrutees Infra Impex India Pvt Ltd) ஆகிய நிறுவனங்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி, இந்திரிஸ்மியா அஷ்ரப்மியா ஷேக் மற்றும் பிரசாந்த் கார்க் ஆகிய மூவர் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்குவதிலும், அவற்றை எடுத்துச் செல்வதிலும் இவர்கள் தெரிந்தே முக்கியப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் தகவல்படி, சதாசிவா ஓவர்சீஸ் நிறுவனம் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பிபி சாஃப்டெக் மற்றும் பிரகிருதிஸ் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் தலா 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கருவூலத் துறை மொத்தம் 60 நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களைக் குறிவைத்து அறிவித்துள்ள விரிவான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


