சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதி விவரங்களைச் சேகரிக்கும் தற்போதைய முறையை மாற்றியமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். சமூக நீதி கொள்கைகளைச் செயல்படுத்த துல்லியமான தரவுகள் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள 'குறிப்பிட்ட தெரிவுகள் இல்லாத திறந்த வினா' முறையில் சாதி விவரங்களைச் சேகரிப்பது தவறான வழிகாட்டும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒரே சாதி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதால், இந்த முறையில் தரவுகளைச் சேகரிக்கும்போது ஒரே சாதி ஆயிரக்கணக்கான பிரிவுகளாகப் பிரிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தத் தவறான தரவுகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகங்களைப் பாதிக்கும் என்பதால், தற்போதைய வினாத்தாளைத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். சாதி விவரங்களை விரிவாகவும் துல்லியமாகவும் சேகரிக்க மாற்று முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



