நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து, 10 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திலிருந்து இந்திய விமானப்படையின் சி-130ஜே ரக விமானம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் புதன்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாளத் தரப்புடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான முழு ஆதரவையும் இந்தியா வழங்கும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டதை உறுதி செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.


