தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 326 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என இந்தியா டுடே-சி வோட்டர் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கணிப்பில் என்.டி.ஏ கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 326 ஆகக் குறைந்துள்ளது. வாக்காளர்களின் நம்பிக்கை தொடர்ந்தாலும், கல்வித்துறை முறைகேடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் இளைஞர்களின் அதிருப்தி சவாலாக உள்ளதாக இந்தக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 261 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரி மாதக் கணிப்பான 287-ஐ விடக் குறைவு என்றாலும், அக்கட்சியின் தற்போதைய 240 இடங்களை விட அதிகம்.
மறுபுறம், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 185 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதக் கணிப்பான 182 இடங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றமில்லை. எனினும், காங்கிரஸ் கட்சி மட்டும் 106 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது முந்தைய கணிப்பில் 80 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை 1,16,000-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F27%2Fnepalflashflood-2026-08-27-08-28-03.jpg&w=3840&q=75)
