இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். செயின்ட் லூயிஸில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி, 15-13 என்ற புள்ளிக்கணக்கில் பிரக்ஞானந்தா இந்த வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
போட்டியின் தொடக்கத்தில் கிளாசிக்கல் ஆட்டங்கள் முடிவில் கருணா ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்தார். இருப்பினும், இறுதி நாளில் அபாரமாகச் செயல்பட்ட பிரக்ஞானந்தா, இரண்டு ரேபிட் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, பிளிட்ஸ் சுற்றிலும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டார். இந்த வெற்றியின் மூலம் அவர் 2,00,000 டாலர் பரிசுத்தொகையை வென்றார். மற்றொரு போட்டியில், வின்சென்ட் கீமரை 18-12 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெஸ்லி சோ மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.



