சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்போது அடிக்கடி செய்திகளில் நாம் கேட்கும் ஒரு வாசகம்:
“இந்த வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன.”
அல்லது,
“உறுப்பினரின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.”
ஆனால் அவைக் குறிப்பு என்றால் என்ன? சட்டமன்றத்தில் ஒருவர் பேசிய பிறகு அதை எப்படி நீக்க முடியும்? அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டால் அவர் அந்த வார்த்தைகளைப் பேசவே இல்லை என்று அர்த்தமா? அந்த வீடியோவை ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடலாமா?
விரிவாகப் பார்க்கலாம்.
அவைக் குறிப்பு என்றால் என்ன?
சட்டப்பேரவை என்பது மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் அரசின் செயல்பாடுகள், சட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடம்.
அங்கு நடைபெறும் முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் உறுப்பினர்களின் உரைகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த அதிகாரப்பூர்வ சட்டமன்றப் பதிவையே பொதுவாக “அவைக் குறிப்பு” அல்லது House Proceedings/Official Record என்று குறிப்பிடுகிறோம்.
அதாவது சட்டமன்றத்தில் யார் என்ன பேசினார், எந்த கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அமைச்சர் என்ன பதில் அளித்தார், எந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது, என்ன முடிவு எடுக்கப்பட்டது போன்றவை அதிகாரப்பூர்வ ஆவணமாகப் பதிவு செய்யப்படுகின்றன.
எளிமையாகச் சொன்னால்,
சட்டப்பேரவையில் நடைபெற்றவற்றின் அதிகாரப்பூர்வ வரலாற்றுப் பதிவுதான் அவைக் குறிப்பு.
பேசப்படும் எல்லா வார்த்தைகளும் நிரந்தரமாக பதிவாகுமா?
அவசியமில்லை.
சட்டமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் பேசும்போது அவையின் விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டே பேச வேண்டும்.
ஒரு உறுப்பினர் பயன்படுத்திய வார்த்தை அல்லது கருத்து ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாகக் கருதப்பட்டால், அதை அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நீக்குவதற்கு பேரவைத் தலைவர் உத்தரவிடலாம்.
சில நேரங்களில் மற்றொரு உறுப்பினர் எழுந்து ஆட்சேபனை தெரிவித்து, குறிப்பிட்ட வார்த்தைகளை நீக்குமாறு பேரவைத் தலைவரிடம் கோரலாம்.
இறுதி முடிவு அவையின் நடைமுறை விதிகள் மற்றும் பேரவைத் தலைவரின் தீர்மானத்தின் அடிப்படையில் அமையும்.
ஏன் ஒரு பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது?
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
உதாரணமாக,
• அவையின் மாண்புக்கு ஒவ்வாத வார்த்தைகள் • அவதூறான அல்லது இழிவான சொற்கள் • ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் • அவையின் விதிமுறைகளுக்கு முரணான கருத்துகள் • விவாதிக்கப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத சில கருத்துகள் • அனுமதிக்கப்படாத தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் • சட்டமன்ற மரபுகளுக்கு முரணான சொற்கள் அல்லது வெளிப்பாடுகள்
போன்றவை நீக்கப்படலாம்.
எனினும், ஒரு கருத்து சர்ச்சைக்குரியது என்பதற்காக மட்டுமே அது தானாக நீக்கப்படுவதில்லை. அவையின் நடைமுறை விதிகள் மற்றும் பேரவைத் தலைவரின் அதிகாரமே இதில் முக்கியமானவை.

