எச்-1பி விசா மற்றும் பிற தற்காலிக பணி விசா வைத்திருப்பவர்கள், வேலை இழந்த பிறகு புதிய வேலை தேடுவதற்கு தற்போது அனுமதிக்கப்படும் 60 நாள் கால அவகாசத்தை ரத்து செய்ய அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ளது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், வேலை இழந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஃபெடரல் ரெஜிஸ்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது இரண்டு மாத கால பொது மக்கள் கருத்து கேட்புக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கை மாற்றம், எச்-1பி விசா பணியாளர்களில் பெரும்பான்மையாக உள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைப் பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக் (HCLTech) மற்றும் எல்.டி.ஐ மைண்ட் ட்ரீ (LTIMindtree) போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த விசாக்களுக்கு அதிக அளவில் ஸ்பான்சர் செய்கின்றன. இந்த மாற்றம், வெளிநாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடைமுறைகளை நிர்வகிப்பதில் மனிதவளத் துறையினருக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த முன்மொழிவு எச்-1பி விசா மட்டுமின்றி, இ-1, இ-2, எல்-1, ஓ-1, டி.என், எச்-1பி1 மற்றும் இ-3 விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஒப்புக்கொண்டாலும், காலியாகும் பணியிடங்களை அமெரிக்க ஊழியர்களைக் கொண்டு நிரப்பலாம் அல்லது ஐ-129 மனு செயல்முறை மூலம் பணியாளர்களைத் தக்கவைக்கலாம் என்று அந்தத் துறை பரிந்துரைத்துள்ளது.

