இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் தரம் மற்றும் விலையை முறைப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம் பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதில் முறைகேடுகள் மற்றும் தரக்குறைபாடு குறித்த புகார்கள் எழுந்ததையடுத்து, இனி கோயில்களே நேரடியாகப் பிரசாதங்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அறநிலையத்துறை ஆணையர் வினய் பிறப்பித்துள்ளார்.
புதிய விதிகளின்படி, லட்டு, அதிரசம், தேன்குழல் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்களின் தயாரிப்புச் செலவு மற்றும் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரசாதங்களின் தரத்தை உறுதி செய்ய ஆவின் நெய் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரசாத பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, எடை, விலை மற்றும் கோயில் முகவரி ஆகிய விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிறிய கோயில்களில் சமையலறை கட்டமைப்பைப் பராமரிப்பது மற்றும் தயாரிப்பு அளவுகளை நிர்வகிப்பது குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரசாதத் தயாரிப்பு தொடர்பான செலவு விவரங்களை முறையாகப் பராமரித்து, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்குத் தரமான பிரசாதங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



