சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களை அடுத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. பெரம்பூரில் அரசியல் பிரமுகர் மற்றும் தண்டையார்பேட்டையில் நடிகர் கொல்லப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, குற்றப் பின்னணி கொண்ட 285 நபர்களை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டலத்தில் 108 பேர், தெற்கு மண்டலத்தில் 94 பேர், கிழக்கு மண்டலத்தில் 45 பேர் மற்றும் மேற்கு மண்டலத்தில் 38 பேர் என மொத்தம் 285 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற வாரண்ட் நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் இந்த நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.



