ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை வாகன உரிமையாளர்கள் ரத்து செய்தால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து வசதியை அவர்களே செய்து தர வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறும் பேருந்து உரிமையாளர்களின் அனுமதிச் சீட்டு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், தகுதிச் சான்றிதழ் மற்றும் வரி விதிமீறல்களைக் கண்டறியவும் செப்டம்பர் 16-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட தணிக்கையில் விதிமீறல்களில் ஈடுபட்ட 400 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தகுதியற்ற ஆவணங்களுடன் இயக்கப்பட்ட 4 வெளிமாநிலப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.



