விமான எரிபொருள் (ATF) விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் சூழலால், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விமான எரிபொருள் விலை மாதந்தோறும் 14 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு அக்டோபர் 6, 2026 அன்று அதிகாலை 12:01 மணி முதல் செய்யப்படும் அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பயணங்களுக்கு, 500 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு 375 ரூபாயும், 2,000 கிலோமீட்டருக்கு அதிகமான பயணத்திற்கு 1,300 ரூபாயும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வழித்தடங்களைப் பொறுத்தவரை, சார்க் நாடுகளுக்கு 1,000 ரூபாயும், தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கு 5,500 ரூபாயும், ஆப்பிரிக்காவிற்கு 6,000 ரூபாயும், ஐரோப்பாவிற்கு 10,000 ரூபாயும் என கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு மிகக் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், சந்தை நிலவரங்களைக் தொடர்ந்து கண்காணித்து தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


