தட்கல் திட்டத்தின் கீழ் வேளாண் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எட்டு மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்காத தமிழக அரசின் செயலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக சுமார் 60,120 விவசாயிகளிடமிருந்து ரூ.1,500 கோடிக்கும் மேல் முன்பணமாக வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதிமுறைப்படி விண்ணப்பித்த 15 முதல் 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல விவசாயிகள் வட்டிக்கு கடன் பெற்று முன்பணம் செலுத்தியும், மின் இணைப்பு கிடைக்காததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பெரும் பொருளாதார இழப்பையும் கடன் சுமையையும் சந்தித்து வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகாவது இப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே வறட்சி மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தவித்து வரும் விவசாயிகளிடம், இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துவிட்டு மின் இணைப்பு வழங்காமல் இருப்பது நியாயமற்றது. எனவே, தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)