சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பங்கேற்கவிருந்த விளம்பர நிகழ்ச்சி, கூட்ட நெரிசல் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் காவல்துறையினர் இந்த முடிவை எடுத்தனர். நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, ஆதி தனது ரசிகர்களிடம் காணொளி வாயிலாக மன்னிப்பு கோரினார்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், வணிக வளாகத்திலிருந்து மக்கள் வெளியேற முற்பட்டனர். இதனால் குருநானக் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல மணி நேரம் ஸ்தம்பித்த நிலையில், வாகன ஓட்டிகள் வெளியேறவே மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
சுமார் 1,000 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி கோரியிருந்த நிலையில், சமூக வலைதளப் பதிவுகளால் எதிர்பாராத விதமாக கூட்டம் கூடியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நிகழ்ச்சிகளுக்குத் தீயணைப்புத் துறை, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்குத் துறை அனுமதி கட்டாயம் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் வணிக வளாகங்களுக்குள் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)