நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி, இனப்பெருக்க மண்டலம், தைராய்டு, மார்பகம், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு பிஎம்2.5 (PM2.5) எனப்படும் நுண் துகள்கள் முக்கிய காரணமாக இருப்பதாக நேச்சர் இதழில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. 2000 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் 88.2 லட்சம் புற்றுநோய் பாதிப்புகளுக்கு இந்த நுண் துகள்களே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
காற்றில் பிஎம்2.5 துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் அதிகரித்தால், புற்றுநோய் பாதிப்பு அபாயம் 16 சதவீதம் உயர்கிறது.
இந்த துகள்கள் இரத்த ஓட்டத்தில் கலந்து டிஎன்ஏ பாதிப்பு, நாள்பட்ட வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோயைத் தூண்டுகின்றன என ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (WHO-IARC), பிஎம்2.5 துகள்களை முதல் நிலை புற்றுநோய் காரணியாக ஏற்கனவே வகைப்படுத்தியுள்ளது. இந்தியாவின் காற்றுத் தரம் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட மோசமாக உள்ள நிலையில், இந்த ஆய்வு இந்தியாவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டின் ஐக்யூ ஏர் (IQAir) உலக காற்றுத் தர அறிக்கையின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட பத்து நகரங்களில் ஒன்பது நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் மரணங்களுக்கு முதன்மை காரணமாக மாறியுள்ள நிலையில், புகைபிடிக்காதவர்கள் மற்றும் பெண்களிடையே இந்த பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எய்ம்ஸ் (AIIMS) உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்கள் இதன் நீண்டகால பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.




