நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா இதுவரை 60 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ள நிலையில், இந்தியா மிக விரைவாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து ஆகஸ்ட் 27-ம் தேதி உணவுப் பொட்டலங்கள், போர்வைகள், தற்காலிக கூடாரங்கள் மற்றும் சோலார் விளக்குகள் அடங்கிய 37.5 டன் பொருட்கள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மூன்றாவது விமானம் மூலம் கையடக்க மின்னாக்கிகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக மருத்துவர்கள் மற்றும் கள ஆய்வு நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவும் நேபாளத்திற்கு விரைந்துள்ளது.

