நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, புனேவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஜிதேந்திர பாட்டீல் (43) உள்ளிட்ட 60 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த மலையேற்ற வீரர் மிலிந்த் சிட்லே தலைமையிலான இந்தக் குழுவினர், ஆகஸ்ட் 23-ம் தேதி கைலாச மானசரோவர் யாத்திரையைத் தொடங்கினர். செப்டம்பர் 6-ம் தேதி இந்த யாத்திரை நிறைவடையவிருந்தது.
புதன்கிழமை காலை 7 மணிக்கு நேபாள-சீன எல்லைக்கு அருகில் உள்ள டிமுரே பகுதியில் இருந்தபோது, ஜிதேந்திர பாட்டீல் தனது மனைவி பல்லவியிடம் வாட்ஸ்அப் மூலம் கடைசியாகப் பேசினார். காலை 8:07 மணிக்கு அவரது செல்போன் கடைசியாகச் செயல்பட்டது. அதன்பிறகு, அவரோ அல்லது அந்த சுற்றுலா குழுவில் உள்ள மற்றவர்களோ தொடர்பில் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரிச்சா டூர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தங்கள் உறவினர்கள் மாயமானது குறித்து அரசு அதிகாரிகளிடமிருந்தோ அல்லது சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடமிருந்தோ முறையான தகவல் கிடைக்கவில்லை என மும்பையைச் சேர்ந்த சேத்தனா குப்தாவின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாயமான சுற்றுலாப் பயணிகளைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



