வீடுகளுக்கான மின் கட்டணத்தில் அதிக மாறுபாடு மற்றும் தவறான பில்லிங் புகார்களைத் தவிர்க்க புதிய வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
இதற்காக எல்.டி பில்லிங் மென்பொருளில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய நுகர்வோர்கள் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
நடப்பு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான கட்டணம், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடப்பட்டு 20 சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகரித்திருந்தால், அந்த நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிப்பது தானியங்கி முறையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் மின் இணைப்புகளை மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மறு ஆய்வு செய்வார்கள்.
மின் கட்டண உயர்வுத் தொகைக்கு ஏற்ப, உதவி கணக்கு அலுவலர் முதல் உதவி செயற்பொறியாளர் வரையிலான அதிகாரிகள் கள ஆய்வு செய்து கட்டணத்தை இறுதி செய்வார்கள். ரீடிங் எடுக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று வேலை நாட்களுக்குள் இந்த ஆய்வை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் கட்டணத்தில் துல்லியம் உறுதி செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


.jpg&w=3840&q=75)
