முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் நிலவும் தாமதம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பரிசீலனை நடைபெறுவதாகத் தெரிவித்தது.
ஊழல் வழக்குகளில் அனுமதி பெறுவதற்கு நீதிமன்றம் இவ்வளவு வற்புறுத்த வேண்டிய சூழல் இருப்பது வருத்தமளிக்கிறது என நீதிபதி குறிப்பிட்டார். இந்தியாவில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்றும், அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது வழக்கின் எதிர்காலம் குறித்து கடவுளுக்குத்தான் தெரியும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பு செயலாளர் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



