தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக அவர் லண்டன் புறப்படுகிறார். முதல்வரான பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்வர், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். மேலும், அங்கு வசிக்கும் தமிழர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் அவர், நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தையும் பார்வையிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அரசு அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் சென்றுள்ளனர்.
தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தவெக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 17-ம் தேதி காலை முதல்வர் சென்னை திரும்புகிறார்.

