எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தை கலைஞர் கடுமையாக எதிர்த்தார் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்காலகட்டத்தில் தான் சிறையில் அனுபவித்த சித்திரவதைகள் குறித்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது தான் கைது செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், சிறையில் நேரிட்ட கொடூரங்களை விவரித்தார்.
தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் பத்து பேருடன் தான் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு நிலவிய சுகாதாரமற்ற சூழல் மற்றும் துர்நாற்றம் குறித்து அவர் வேதனை தெரிவித்தார். மேலும், இரவில் தூங்க விடாமல் காவலர்கள் பூட்ஸ் காலால் மிதித்து தாக்கியதாகவும், ஆயுள் தண்டனை கைதிகளைக் கொண்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறையில் தாக்கப்பட்டதில் தனது தாடை எலும்புகள் உடைந்ததாகவும், அந்தத் தழும்புகள் இன்றும் தனது உடலில் இருப்பதாகவும் கூறிய ஸ்டாலின், தமிழர்களுக்காகப் போராடியதால் ஏற்பட்ட அந்தத் தழும்புகளே திமுகவின் வரலாறு என்று தெரிவித்தார்.

