பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது’ என தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி சூட்டியுள்ளார்.
‘‘எங்கள் தகப்பனை இழந்து திக்கற்றவர்களாக நிற்கிறோம்’’ என பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவு குறித்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு எளிய தமிழில் உரை எழுதியவர். நகைச்சுவை மற்றும் நாகரிகமான கருத்துக்களுடன் பட்டிமன்றங்களை நடத்தி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் என்று தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தமிழ் இலக்கியப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகளைப் பெற்றவர் சாலமன் பாப்பையா. பன்முகத் திறமை கொண்ட அவரது மறைவு தமிழ் அறிவுலகத்திற்கும் கலைத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தலைவர்கள் தங்களது அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்.



